இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அவரது 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. பாரதிராஜா இயக்கிய ‘புதிய வார்ப்புகள்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்த நான், அடுத்த படமான ‘கன்னிப்பருவத்திலே’ என்ற படத்தில் வில்லனாக நடித்தேன். பிறகுதான் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சினிமா படங்கள் பார்த்த அனுபவம் மட்டுமே இருந்தது. மற்றபடி சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. இங்குள்ள இயக்குனர்களின் படங்களை பார்த்துதான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். பிறகு புத்தகத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஒவ்வொரு படத்தையும் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். அடுத்து ஒரு வெப்தொடரும், ஒரு படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறேன்’ என்றார்.

