
கன்னட இசை அமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம், ‘45’. இதில் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி நடித்துள்ளனர். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நேற்று படம் வெளியானது. இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2022ல் வெளியானாலும், 2023ல் படப்பிடிப்பு தொடங்கி 80 நாட்கள் நடந்தது. அப்போது திடீரென்று சிவராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக அமெரிக்கா சென்று கீமோ தெரபி சிகிச்சை பெற்றார்.
இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர் குணமடைந்து பெங்களூரு திரும்பிய பிறகு கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டது. சிவராஜ்குமார் புற்றுநோயில் இருந்து மீண்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதை நினைவுகூறும் வகையில், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சவாலுக்கு ஒரு வருடம் ஆகிறது.
நான் மீண்டும் அதே உத்வேகத்துடன் முன்னோக்கி செல்வதற்கு எனது ரசிகர்களின் அன்பு மற்றும் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மனோகரன் முருகேசன், ஓ.திலீப், சசிதர், வி.கே.சீனிவாஸ், இ.யோகிதா, இ.அனிதா தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு காரணம். உங்கள் பேரன்புக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘45’ படம் திரைக்கு வந்த நாளில், இதுபோன்ற ஒரு பதிவை சிவராஜ்குமார் வெளியிட்டது, அவரது ரசிகர்களின் மனதை நெகிழவைத்துள்ளது.

