நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு தனிமையில் இருந்த சமந்தா, கடந்த 1ம் தேதி வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை ரகசிய காதல் திருமணம் செய்துகொண்டு, கணவருடன் மும்பையிலுள்ள வீட்டில் குடியேறியுள்ளார். இந்நிலையில், சமந்தாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘மகேஷ் பாபுதான் இந்தியாவிலேயே மிகவும் அழகான ஹீரோ. அவருக்கு அருகில் இருக்கும்போது, நானும் அழகாக தோன்ற வேண்டும் என்று, மேக்கப்பில் அதிக கவனம் செலுத்தினேன்’ என்று பேசியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘தூக்குடு’, ‘சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு’, ‘பிரம்மோத்ஸவம்’ ஆகிய படங்களில் சமந்தா நடித்திருக்கிறார்.
தற்போது ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து நடிக்கும் அவர், ‘ஓ பேபி’ என்ற படத்துக்கு பிறகு மீண்டும் நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிக்கிறார். அவருடன் குல்ஷன் தேவய்யா, திகாந்த், கவுதமி, மஞ்சுஷா நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபரில் தொடங்கியது. திருமணத்துக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள சமந்தா, சில ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கிறார். இதற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேகர் ஐதராபாத் வந்துள்ளார்.
சமந்தா கூறுகையில், ‘லீ விட்டேகர் ஒரு மாதம் மட்டுமே இங்கு தங்குவார். அதற்குள் அவருடனான எங்கள் பணிகளை முடித்துவிட வேண்டும். தற்போது ஐதராபாத்தில் அதிக குளிர் என்பதால், படக்குழுவினரை சுறுசுறுப்பாக வைத்திருக்க இருமடங்கு கடினமாக உழைக்க வேண்டும்’ என்றார். இதற்கு முன்பு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, ரஜினிகாந்தின் ‘லிங்கா’, எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ உள்பட சில படங்களுக்கு லீ விட்டேகர் சண்டைக் காட்சிகளை வடிமைத்துள்ளார்.
