×

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலீலா

 

தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் லீலா, தமிழில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், மருத்துவம் படித்து பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் அஜித் குமாரை மலேசியாவிலுள்ள கார் ரேஸ் டிராக்கில் சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். முன்னதாக சமூக வலைத்தளங்களில் அவரது ஏஐ போட்டோக்கள் வைரலானது. இதனால் டென்ஷனான லீலா வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் எனது இருகரம்கூப்பி, ஒவ்வொரு சமூக வலைத்தள பயனர்களிடம், இனி ஏஐயால் உருவாக்கப்பட்ட முட்டாள்தனத்தை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும், அதை தவறாக பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

தொழில்நுட்பம் முன்னேறுவது வாழ்க்கையை எளிதாக்கவே தவிர, இப்போது இருப்பதை விட சிக்கலாக்குவதற்கு கிடையாது. ஒவ்வொரு பெண்ணும் கலையை தங்களது தொழிலாக தேர்வு செய்திருந்தாலும், அவர்களும் ஒரு மகளோ, பேத்தியோ, சகோதரியோ, தோழியோ, சக ஊழியரோதான். நாங்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன், மகிழ்ச்சியை பகிரும் துறையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். எனது வேலைப்பளுவின் காரணமாக, ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்களை பற்றி இதுவரை அறியாமல் இருந்தேன்.

இதை கவனத்துக்கு கொண்டு வந்த எனது நலம்விரும்பிகளுக்கு நன்றி. நான் எப்போதும் எனது சொந்த உலகில் வாழ்ந்து வருகிறேன். ஆனால், இது மிகவும் வருத்தமளிப்பதாகவும். பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எனது சக ஊழியர்களும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதை பார்க்கிறேன். மிகவும் அன்புடனும், கண்ணியத்துடனும், எனது பார்வையாளர்களின் மீதுள்ள நம்பிக்கையுடனும், தயவுசெய்து எங்களுக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Srileela ,Ajith Kumar ,Malaysia ,Leela ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா