- ஜஸ்டின் பிரபா கரன்
- 2025 OTT விருதுகள்
- மும்பை
- அலியா பட்
- விக்கி கௌஷால்
- அனன்யா பாண்டே
- விவேக் சோனி
- மாதவன்
- பாத்திமா சனா
- நெட்ஃபிக்ஸ்
தியேட்டர்களுக்கு இணையாக ஓடிடி தளங்களும் தனித்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கும், தொடர்களுக்கும் கடந்த சில வருடங்களாக விருதுகள் வழங்கி வரும் தனியார் நிறுவனம், சமீபத்தில் 2025ம் ஆண்டுக்கான ஓடிடி விருது வழங்கும் விழாவை மும்பையில் நடத்தியது. அலியா பட், விக்கி கவுஷல், அனன்யா பாண்டே கலந்துகொண்ட இவ்விழாவில், இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் விருது பெற்றார். விவேக் சோனி இயக்கத்தில் மாதவன், ஃபாத்திமா சனா நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான ‘ஆஃப் ஜெய்சா கோய்’ என்ற பாலிவுட் படத்துக்காக, சிறந்த இசை ஆல்பத்துக்கான விருதை ஜஸ்டின் பிரபாகரன் வென்றுள்ளார். விவேக் சோனி, ஜஸ்டின் பிரபாகரன் கூட்டணியில் கடந்த 2021ல் ரிலீசான ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ என்ற பாலிவுட் படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கடந்த 2014ல் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான ஜஸ்டின் பிரபாகரன், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, பாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘இறுகப்பற்று’, ‘அடியே’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர், தெலுங்கில் ‘டியர் காம்ரேட்’, ‘ராதே ஷ்யாம்’ போன்ற படங்களுக்கும், மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘பாச்சுவும் அற்புத விளக்கும்’, மோகன்லால் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ போன்ற படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தற்போது தமிழில் ‘சிறை’, மலையாளத்தில் ‘சர்வம் மாயா’, இந்தியில் ‘கோகோ அன்ட் நட்’ போன்ற படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். தனது இசையில் மற்ற இசை அமைப்பாளர்களையும் பாட வைத்து வருகிறார். தானும் பாடுகிறார்.
