கட்ஸ்: விமர்சனம்

நிறைமாத கர்ப்பிணியான மனைவி ஸ்ருதி நாராயணனை இரவு நேரத்தில் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடும் ரங்கராஜ், ஆஸ்பத்திரியில் தனக்கு மகன் பிறந்திருப்பதை தெரிந்ததும் இறந்துவிடுகிறார். மீன் விற்கும்போது மாமூல் கேட்டு நச்சரித்த போலீசை கொன்ற ஸ்ருதி நாராயணன் இன்னொருவரால் கொல்லப்படுகிறார். தன் தாயின் லட்சியப்படி போலீசாகிறார், மகன் ரங்கராஜ். நேர்மையான அதிகாரியான அவர், மணல் அள்ளும் பிரச்னையில் கொல்லப்பட்ட திருநங்கையின் வழக்கை விசாரித்து, கார்ப்பரேட் முக்கியப்புள்ளி அர்ஜூன் ேதவை கைது செய்கிறார்.

இந்நிலையில், அர்ஜூன் தேவின் தந்தை பிரவீன் மஞ்ச்ரேக்கருக்கும், தனது தந்தை ரங்கராஜூக்குமான பழைய பகையை அறிந்த ரங்கராஜ், மனைவி நான்ஸியை அநியாயமாக பறிகொடுத்த நிலையில் என்ன செய்கிறார் என்பது மீதி கதை. கார்ப்பரேட் முதலாளியால் விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகளை சொல்ல முயன்ற இயக்குனர் ரங்கராஜ், ஒரே படத்தில் பல கதைகளை சொன்னதால், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இரட்டை வேடத்தில் நடித்துள்ள ரங்கராஜூக்கு ஸ்ருதி நாராயணன், நான்ஸி ஜோடி. மூவரும் நன்கு நடித்துள்ளனர்.

மலையாளம் கலந்த நான்ஸியின் தமிழ் பேச்சு இனிக்கிறது. ஸ்ருதி நாராயணனின் ஆவேசம் மிரட்டுகிறது. மண், விவசாயம், தமிழ், வீரம் என்று ரங்கராஜ் கொக்கரித்துள்ளார். சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், அறந்தாங்கி நிஷா, டெல்லி கணேஷ் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர் பிரவீன் மஞ்ச்ரேக்கரின் நடிப்பு, ஓவர். இருட்டில் நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் மனோஜ் முத்திரை பதிக்க, ஜோஸ் ஃபிராங்க்ளின் பின்னணி இசை காட்சிகளை நகர்த்த உதவியுள்ளது. ‘மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டியது நமது தலையாய கடமை’ என்ற விஷயத்தை வலியுறுத்திய படக்குழுவினரை பாராட்டலாம்.

Related Stories: