திருவனந்தபுரம்: பிரபல பாடகர் பி.ஜெயச்சந்திரன் (80), புற்றுநோய் காரணமாக திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார். கடந்த 1970 முதல் மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் கொடிகட்டிப் பறந்த பின்னணி பாடகர்களில் பி.ஜெயச்சந்திரன் ஒருவர். எர்ணாகுளம் திருப்பூணித்துறை அவரது சொந்த ஊர். சிறுவயதில் செண்டை மேளம், மிருதங்கம் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட அவர், பிறகு திரைப்பட பாடகராக மாறினார். 1965ல் ‘குஞ்சாலி மரைக்கார்’ என்ற மலையாளப் படத்தில் முதன்முதலாகப் பாடினார்.
தமிழில் விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் அவர் பாடிய ‘ராசாத்தி உன்ன’, ‘காத்திருந்து காத்திருந்து’ உள்பட பல தமிழ்ப் படங்களில் அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை, பல்வேறு முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் அவர் பாடியுள்ளார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பி.ஜெயச்சந்திரன் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் 4 விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன. கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்த பி.ஜெயச்சந்திரன், திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு படவுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்’, ‘மாஞ்சோலை கிளிதானோ’, ‘கடவுள் வாழும் கோயிலிலே,’ ‘வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘தாலாட்டுதே வானம்’, ‘பூவை எடுத்து’, ‘கொடியிலே மல்லியப்பூ’, ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, ‘அந்திநேர தென்றல் காற்று’, ‘சொல்லாமலே யார் பார்த்தது’ போன்ற தமிழ் படப் பாடல்களில் பி.ஜெயச்சந்திரனின் குரலில் இருந்த வசீகரம் ரசிகர்களை ஈர்த்தது.