×

ஆட்டிசம் பாதித்த மூத்த மகன்: பிரியா ராமன் உருக்கம்

சென்னை: நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ரஞ்சித், கடந்த 1999ல் நடிகை பிரியா ராமனை திருமணம் செய்தார். முன்னதாக ‘நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அவர்கள், நாளடைவில் காதலித்தனர். பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 2 மகன்கள். அதில் மூத்த மகன் ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்பதை சமீபத்தில் ரஞ்சித் குறிப்பிட்டார். இதுகுறித்து பிரியா ராமன் அளித்துள்ள பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது மகன் குறித்து அவர் கூறியதாவது: ஆதித்யாவை நாங்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. நான் ஆதித்யா அம்மா என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற மகனை வீட்டில் வளர்ப்பது என்பது சவாலான விஷயம். ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்று சொன்னபோது, `நீ என்ன தவறு செய்தாய்? உனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது’ என்று, ஆறுதல் சொல்வதாக நினைத்து என்னிடம் சிலர் சொல்வார்கள். நானும் வருத்தப்பட்டு அழுதிருக்கிறேன் என்றாலும், இதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு பல விஷயங்கள் புரிந்தது. கடவுள் என்னை நம்பி, என்னிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார். என்மீது கடவுளுக்கு அவ்வளவு நம்பிக்கை என்று தோன்றியது.

ரஞ்சித்தின் நிறைய குணங்கள் ஆதித்யாவிடம் இருக்கிறது. மிகவும் பாசமான, அன்பான மகன். நாங்கள் சோகமாக இருந்தால், உடனே வந்து கட்டிப்பிடிப்பான். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பான். அவன் எங்களின் அன்புக் குழந்தை. அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவோம். அவனது பயணத்தில்தான் எங்களது பயணமும் இணைந்திருக்கிறது. நான் எங்கே சென்றாலும் ஆதித்யாவையும் அழைத்துச் செல்வேன். மியூசிக், ஸ்போர்ட்ஸ் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்ததை சந்தோஷமாக செய்துகொண்டிருக்கிறான்.

Tags : PRIYA RAMAN ,Chennai ,Ranjit ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...