×
Saravana Stores

முரா மலையாளம் விமர்சனம்

இருபது வயது கொண்ட நான்கு இளைஞர்கள், பிரபல ரவுடி சூரஜ் வெஞ்சரமூடுவிடம் புதிதாக வேலைக்குச் சேருகின்றனர். எள் என்றால் எண்ணெயாக மாறி நிற்கும் நான்கு இளைஞர்களும் வெட்டுக்குத்து, அடிதடி போன்றவைக்கு அஞ்சாதவர்கள். துடிப்பான ரத்தமும், ஆவேசமும் அவர்களை எந்தவொரு செயலையும் துணிச்சலாகச் செய்ய வைக்கிறது. அதைக்கண்டு பெருமைப்படும் சூரஜ் வெஞ்சரமூடு, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் ஒரு மிகப்பெரிய அசைன்மெண்ட்டை அந்த இளைஞர்களிடம் ஒப்படைக்கிறார்.

அதாவது, கோடிக்கணக்கான கள்ளப்பணத்தைக் கொண்டு வர வேண்டும். சூரஜ் வெஞ்சரமூடுவுக்கு தலைவியாக இருப்பவர், மாலா பார்வதி. நான்கு இளைஞர்கள், மதுரையிலுள்ள இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து கள்ளப்பணத்தை லாவகமாக கொள்ளை அடிக்கின்றனர். பிறகு பணத்தை மாலா பார்வதியிடம் பத்திரமாக ஒப்படைக்கும் ஆறு இளைஞர்களுக்கும் ஏற்படும் நம்பிக்கை துரோகம் என்ன? சூரஜ் வெஞ்சரமூடுவின் கேம் என்ன என்பது மீதி கதை.

மலையாளத்தில் வெளியான ‘கப்பேலா’ என்ற படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட முஹமது முஸ்தபா இயக்கியுள்ள படம் இது. ரவுடியிஸம் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், இதில் நான்கு இளைஞர்களின் பொறுப்பற்ற வாழ்க்கை, பாசம், நேர்மை, பழிவாங்கல் ஆகிய அம்சங்களை கமர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் படம் முழுக்க ஏற்படுவதே திரைக்கதைக்கான சிறப்பு. சூரஜ் வெஞ்சரமூடு அலட்டல் இல்லாத ரவுடியாக சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்துள்ளார். நான்கு இளைஞர்களில் ஹிருது ஹாரூனின் நடிப்பு மிரட்டல் ரகம். ஆக்‌ஷனையும், எமோஷனையும் அளவாக வெளிப்படுத்தி, சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்துள்ளார்.

இதர ஐந்து இளைஞர்களும் மற்றும் கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், பி.எல்.தேனப்பன் ஆகியோரும் கேரக்டருக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர். லேடி தாதா மாலா பார்வதி, தனது பார்வையிலேயே அசத்தியுள்ளார். பாசில் நாசரின் ஒளிப்பதிவும், சாமன் சாக்கோவின் எடிட்டிங்கும், கிறிஸ்டி ஜோபியின் இசையும், முழுநீள பழிவாங்கல் ஆக்‌ஷன் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக்க உதவியுள்ளன. படம் முழுக்க வன்முறைக் காட்சிகள் இருந்தாலும், கிளைமாக்ஸில் திரையே ரத்தக்களறியாக மாறிவிடுவதை சற்று குறைத்திருக்கலாம்.

Tags : Rawudi Suraj Wenchramudu ,
× RELATED சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-24