ஐந்தாம் வேதம் (வெப்சீரிஸ்- விமர்சனம்)

தனது தாயாரின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள வாரணாசி செல்லும் சாய் தன்ஷிகாவை ஒரு மர்ம நபர் கட்டுப்படுத்தி, ஐந்தாம் வேதத்தின் மர்மம் அடங்கிய பழங்கால பெட்டியைக் கொடுக்கிறார். அதை அய்யங்கார்புரம் என்ற ஊரிலுள்ள பழமையான கோயிலில் கொடுக்கச் சொல்கிறார். அதற்கான பயணத்தை மேற்கொள்ளும் சாய் தன்ஷிகா, தன் பிறப்பின் ரகசியம் குறித்து அறியும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அப்பெட்டியில் இருக்கும் மர்மங்களை தெரிந்துகொள்ள வேறு சிலரும் தீவிரமாக முயற்சிக்கின்றனர். அப்போது அவர்களைப் பின்தொடரும் அமானுஷ்ய எதிர்விளைவுகள் என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்துகிறது? ஐந்தாம் வேதத்தின் மர்மத்தை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொண்டார்களா என்பது மீதி கதை.

தமிழிலும், தெலுங்கிலும் உருவாகியுள்ள இந்த வெப்தொடர் 8 எபிசோடுகள் கொண்டது. ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய 4 கிரகங்கள், சூரியனைப் பார்த்தது போல் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும். அப்போது ஒரு அதிசயம் நடக்கும் என்பது ஐதீகம். வேதம் என்பது ஒன்று. அதில் பல பாகங்கள் இருக்கிறது. இதில் ஐந்தாம் பாகம் எப்போது வெளியாகும் என்பதை பரபரப்பான, மர்மங்கள் நிறைந்த அதிரடி திருப்பங்களுடன் இத்தொடர் விவரிக்கிறது. சாய் தன்ஷிகாவை மையப்படுத்தி முழு கதையும் நகர்கிறது. அவரும் அல்ட்ரா மாடர்ன் கேரக்டரில் செம அலட்டலாகவும், ஸ்டைலாகவும் நடித்துள்ளார்.

குகைக்குள் நடக்கும் மோதலில் ஆக்‌ஷன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, ஒய்.ஜி.மகேந்திரன், கோபி கண்ணதாசன், ராம்ஜி, பிரஜ்னா ரவி, பொன்வண்ணன், சண்முகராஜன், இந்துமதி, மேத்யூ வர்கீஸ், செம்மலர் அன்னம் ஆகியோர், கேரக்டருக்கு ஏற்ப இயல்பாக நடித்துள்ளனர். நிஜத்திலும், ஏஐ கேரக்டரிலும் விவேக் ராஜகோபால், கிரிஷா குரூப் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். புராணக்கதையை இன்றைய காலத்துடன் இணைத்து சீனிவாசன் தேவராஜ் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். கதையின் ஓட்டத்தை ரேவா தனது பின்னணி இசையின் மூலம் விறுவிறுப்பாக்கியுள்ளார். கலை இயக்குனரின் பணி அசத்துகிறது. ஜீ5ல் நாளை முதல் ஒளிபரப்பாகிறது.

Related Stories: