×

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: பீகார் மாநிலம் போல் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அமல்படுத்தாத வண்ணம் முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
அண்மையில் ஆந்திர பிரதேசம் மதனபள்ளியில் விசிக மாநில பொதுச்செயலாளர் சிவபிரசாத் பராமரித்து வரும் புத்தர் சிலை உடைக்கப்பட்டது. ஆந்திர பிரதேசத்தை மெல்ல மெல்ல சங்கிகளின் பிரதேசமாக மாற்றி வருகிறார்கள். சிவபிரசாத் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஜயவாடாவில் வரும் 23ம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதேபோல், பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழகத்திலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விரிவாக விவாதிக்க தமிழக முதல்வர் அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும். ஒரு இந்து தீவிரவாதியாக இருக்கவே முடியாது என உள்துறை அமைச்சரின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது. இதை தொடர்ந்து மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் என்ஐஏ அதிகாரிகளுக்கு மறைமுக நெருக்கடியை அமித்ஷா தந்திருக்கிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் சனாதனத்தை மையப்படுத்த பாஜ துடிக்கிறது. இங்குள்ள கட்சிகளுடனும், சாதிய மதவாத அமைப்புகளுடனும் பாஜ இணைந்து செயல்பட தொடங்கிய பிறகுதான், சாதியின் பெயரில் வன்முறைகள், கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சாதிய கொலையை தடுப்பதற்கான சட்டம் இயற்ற பாஜ ஆர்வம் காட்டவில்லை. பாஜ, ஆர்எஸ்எஸ் சார்பில் ஐடி ஊழியர் கொலைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கவில்லை. இவற்றை ஊக்கப்படுத்துவோராக அவர்கள் இருக்கிறார்கள். எனவே, தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையாக இருந்து வெறுப்பு அரசியலை பரவவிடாமல் தடுக்க வேண்டும். திமுக கூட்டணி பலவீனமாக இருப்பதால் தான் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அதேநேரம், ஓபிஎஸ், தேமுதிக போன்றோர் கூட்டணிக்கு வந்தால், அவர்களோடு இணைந்து பயணிப்பதில் சிக்கல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thirumavalavan ,Chennai ,Tamil Nadu ,Bihar ,Viduthalai Siruthaigal Party ,Andhra Pradesh… ,Dinakaran ,
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...