ஜனப்பன்சத்திரம் – ஊத்துக்கோட்டை இடையே ரூ.32 கோடியில் தொடங்கப்பட்ட சாலைப்பணி பாதியில் நிறுத்தம்: விபத்தில் சிக்கி பொதுமக்கள் அவதி

ஊத்துக்கோட்டை, ஜூலை 30: ஜனப்பன்சத்திரம் – ஊத்துக்கோட்டை இடையே ரூ.32 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட சாலைப்பணி பாதியில் நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் முதல் பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை வரை தார்ச்சாலை போடப்பட்டது. இந்த. சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளி, திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா, கர்னூல் ஆகிய பகுதிகளுக்கும், இதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் கார், பஸ், வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இந்த சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறியது. மேலும் இந்த சாலையில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்றதால் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம் பெரியபாளையம், கன்னிகைப்பேர், ஜெயபுரம், வடமதுரை கூட்டுச்சாலை, மஞ்சங்காரணை உள்ளிட்ட பகுதியில் ஆங்காங்கே சேதம் அடைந்து, பெரிய அளவில் மரண பள்ளங்கள் உருவாகின.

மேலும், பல இடங்களில் சாலை விரிசல் ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள், இப்பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, குண்டும், குழியுமான சாலைகளை அகற்றிவிட்டு, தரமான சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் மாதமும், ஜனவரி மாதம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளங்களில் பிப்ரவரி மாதம் தற்காலிகமாக பேட்ஜ் ஒர்க் பணிகள் செய்தனர். இதனால், மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

விரைவில் சாலை போட்டால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, ஜனப்பன்சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை ரூ.32 கோடி செலவில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள், கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, ஜனப்பன்சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் வரை சாலை போட்டுள்ளனர். ஆனால் ஊத்துக்கோட்டை நேரு பஜார், நாகலாபுரம் சாலை, போக்குவரத்து சோதனைச்சாவடி வரை பழைய சாலையை கொத்தியும், பொக்லைன் மூலம் கீறியும் வைத்துள்ளனர். அப்பகுதிகளில் இன்னும் சாலை போடவில்லை. இதனால் பைக்கில் செல்பவர்கள் சாலையில் செல்ல முடியாமல் கீழே விழுந்து காயமடைகிறார்கள். எனவே, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலைப்பணியை உடனே தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஜனப்பன்சத்திரம் – ஊத்துக்கோட்டை இடையே ரூ.32 கோடியில் தொடங்கப்பட்ட சாலைப்பணி பாதியில் நிறுத்தம்: விபத்தில் சிக்கி பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: