மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மும்மொழிப் பிரச்சினை குறித்து தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப் பூர்வ பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சுதந்திரமாக முடிவு செய்யலாம். கல்வி என்பது அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள ஒரு பாடமாக இருப்பதால், 2020ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சம் மற்றும் பரிந்துரைகளின்படி, மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதற்கான முறைகள் குறித்து முடிவு செய்வது அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களைப் பொறுத்தது என அவர் மக்களவையில் தெரிவித்தார்.

பன்மொழித் தன்மையை ஊக்குவிப்பதை இந்தக் கொள்கை வலியுறுத்துவதாகவும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மும்மொழி கொள்கையை நெகிழ்வான முறையில் ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும், உள்ளூர் தேவைகள், மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் செயல்படுத்தல் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், NEP 2020 இல் உள்ள ஒரு விதியை மேற்கோள் காட்டினார். அதில் அரசியலமைப்பு விதிகளை மனதில் கொண்டு மும்மொழி கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், ஆனால் “மும்மொழி கொள்கையை அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும், மேலும் எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது” என்றும் கூறப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒன்றிய அரசு பின்வாங்கியது.

The post மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: