நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.36 கோடி கடன் வழங்க இலக்கு

நாமக்கல், ஜூலை 24: வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.36 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை, தேவையான நேரத்தில் நல்ல விலையில் விற்பனை செய்து, வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல, வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அறுவடைக்கு பிந்தைய காலங்களில் இழப்பை குறைக்கவும், உபரி விளை பொருட்களை மதிப்பு கூட்டி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் வழிவகை செய்கிறது. இதற்காக வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, ஒன்றிய அரசு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்த நிதித்திட்டத்தின் கீழ், 3 சதவீதம் வட்டி மானியம் மற்றும் கடன் உத்திரவாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதுமாக வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.5,990 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 31ம் தேதி வரை, தமிழ்நாட்டில் ரூ.2,534 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 2025-26ம் நிதியாண்டிற்கு, இத்திட்டத்தின் மூலமாக ரூ.3,546 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.36 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி கடனுக்கு, 7 ஆண்டுகள் வரை 3 சதவீதம் வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்திரவாதம் வழங்கப்படுகிறது. மேலும், அரசின் மற்ற திட்டங்களில் மானியம் பெறும் விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுயஉதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கூட்டமைப்புகள், புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்களான, மின்னணு வணிக மையங்கள், சேமிப்பு கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் பண்ணை சார்ந்த லாபகரமான தொழில்களான நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், விவசாய நிலத்திலேயே சோலார் பம்ப்செட் அமைத்தல், மின் தொகுப்புடன் இணைக்கப்பட்ட விவசாய சோலார் பம்ப் செட்டு அமைப்பு, மண்ணில்லா வேளாண்மை மற்றும் காளான் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் இணையதள முகவரியில், விரிவான திட்ட அறிக்கையுடன், விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் தேவைப்படும் விவசாயிகள், நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தை, தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.36 கோடி கடன் வழங்க இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: