கெங்கவல்லி, டிச.11: தலைவாசல் ஒன்றியம், வேப்பம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வடகிழக்கு பருவமழையின் போது பாதுகாத்து கொள்வது குறித்து, மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை, சிறப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், செல்லப்பாண்டியன் ஆகியோர் வடகிழக்கு பருவமழை குறித்து எடுத்துரைத்தனர். வெள்ளத்தில் ஒருவர் சிக்கிக்கொண்டால், அவரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்தும் விளக்கினர். மேலும், இடி, மின்னலுடன் மழை பெய்தால் மாணவர்கள் மரத்தடியில் நிற்கக் கூடாது. பழுதான கட்டிடத்தின் அடியில் நிற்கக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
