நாமக்கல், ஜூலை 22: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 575 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், ஒரு பயனாளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலை, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு மாடு வளர்ப்பு கடனுதவிக்கு வட்டி மானியமாக ரூ.5,114க்கான காசோலை வழங்கினார்.
மேலும், நாமக்கல் மாநகராட்சி 27வது வார்டில், கூரை வீடு தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சமையல் பாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.1,950 மதிப்பிலான பிரெய்லி கடிகாரம் மற்றும் ஒருவருக்கு ரூ.6,840 மதிப்பில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 7 பேருக்கு ரூ.1.13 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன், சமூக பாதுகாப்புத் திட்ட சப்கலெக்டர் பிரபாகரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post 575 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.
