நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் புறவழிச்சாலை திட்டத்திற்காக 4 மற்றும் 5வது கட்ட பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.103 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார். நாமக்கல் மாநகராட்சி பொன்விழா நகரில் ரூ.49 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. ராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் கலாநிதி முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாநகருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல்லுக்கு சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணி 5 கட்டங்களாக நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதில், முதல் 3 கட்டங்கள் திருச்சி சாலை வரை பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 4 மற்றும் 5வது கட்டமாக, திருச்சி சாலையில் இருந்து மோகனூர் சாலையை இணைக்கும் வகையிலும், மோகனூர் சாலையில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையை தொட்டிப்பட்டி கிராமத்தில் இணைக்கும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த 5 கட்ட பணிகள் நிறைவு பெற்றால் தான், ஒட்டுமொத்தமாக நாமக்கல் மாநகரத்தின் சுற்றுவட்ட சாலையின் திட்டம் முழுமை பெறும்.
முதல் 3 கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், ஒரு ரயில்வே மேம்பாலமும் அடங்குகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுவட்ட சாலையின் பணிகளை தீவிரப்படுத்த முதல்வரும், துணை முதல்வரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, 4வது மற்றும் 5வது கட்டத்தை செயல்படுத்துவற்கான அரசாணை வெளியிட்டு, நிர்வாக அனுமதியை அளித்துள்ளனர். இதையடுத்து, திருச்சி சாலையில் இருந்து மோகனூர் சாலை வரையிலும், மோகனூர் சாலையில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை வரையிலும், மொத்தம் 10 கி.மீ., தொலைவிற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.103 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் இந்த பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படும்.
முதல் கட்ட புறவழிச்சாலை முதலைப்பட்டியில் இருந்து நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 2வது கட்டம், சேந்தமங்கலம் சாலையை இணைக்கும் பகுதியாகும். அதற்கு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து திருச்சி சாலை வரை இணைப்பது 3வது கட்டமாகும். இந்த பணிகள் சுமார் 80 சதவீதம் அளவிற்கு முடிவடைந்துள்ளது. நாமக்கல் புறவழிச்சாலை திட்டத்திற்கு, தங்களுடைய நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதற்கும் சேர்த்து, ரூ.411 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், சீரான போக்குவரத்திற்கும், மாநகர பகுதியில் விபத்துகளை கட்டுப்படுத்துவும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த ஆட்சியிலே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிற இந்த புறவழிச்சாலை பணிகள் முழுமை பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் 4 மற்றும் 5ம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி, தெற்கு நகர திமுக செயலாளர் ராணா.ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் காந்தி(எ) பெரியண்ணன், ஒன்றிய செயலாளர் பழனிவேல், சார்பு அணி நிர்வாகிகள் மார்ட்டின், அகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post 4, 5வது கட்ட பணிக்கு ரூ.103 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.
