கரூர், ஜூலை 21: கரூரில் நடைபெற்ற கரூர் மாவட்ட சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் 14வது ஆண்டு பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை வகித்தார். பேரவை கூட்டத்தை மாவட்ட செயலாளர் முருகேசன் துவக்கி வைத்து பேசினார்.
மாநில துணைத்தலைவர் பிச்சைமுத்து, கட்டுமான சங்க செயலாளர் ராஜாமுகமது, உள்ளட்சி சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக விநாயகம், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாராக சரவணன் உட்பட 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. வைரவன் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில், சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும். நலவாரிய செயல்பாடுகளுக்கு தொழிலாளர்களின் பணப் பயன்களை வழங்குவதற்கு நலவரி வசூலித்திட வேண்டும்.
டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் இபிஎஸ், இஎஸ்ஐ போன்றவை முறையாக செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் நிர்வாக அடையாள அட்டை வழங்குவதுடன் சீருடை வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அரசு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும்: ஆண்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.
