எப்ஸ்டீன் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அமெரிக்க அரசு, எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளி கிலெயின் மேக்ஸ்வெல் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆவணங்களை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிபர் டிரம்புடன் 1990 மற்றும் 2000ம் ஆண்டுகளின் முற்பகுதியில் எப்ஸ்டீன் பலமுறை புகைப்படம் எடுத்துக்கொண்டவர் ஆவார். இந்தச் சூழலில், பிரபல ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை மற்றும் அதன் உரிமையாளர் ரூபர்ட் முர்டாக் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக கடந்த 2003ம் ஆண்டில் எப்ஸ்டீனின் பிறந்தநாளுக்கு டிரம்ப் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலான பெண்ணின் நிர்வாண ஓவியம் இருந்ததாகவும், இருவரும் பகிர்ந்துகொண்ட ரகசியங்கள் பற்றிய குறிப்பு இருந்ததாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி தனது நற்பெயருக்கும், நிதிநிலைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, 1,000 கோடி டாலர் (சுமார் ரூ. 83,500 கோடி) நஷ்டஈடு கேட்டு டிரம்ப் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். பத்திரிகையில் வெளியான செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள டிரம்ப், ‘குப்பைக் குவியல்’ என்று அப்பத்திரிகையை விமர்சித்ததுடன், பத்திரிகையின் உரிமையாளர் ரூபர்ட் முர்டாக்கை நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் ஏற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The post பெண்ணின் நிர்வாண படத்தின் கடித செய்தி; ரூ.83,500 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல பத்திரிகை மீது வழக்கு: அமெரிக்க அதிபர் கடுங்கோபம் appeared first on Dinakaran.
