மின்கம்பி அறுந்து மின்சார ரயில் சேவை பாதிப்பு

 

மாதவரம், ஜூலை 19: அரக்கோணத்திலிருந்து சென்னை பீச் வரை செல்லும் மின்சார ரயில் நேற்று இரவு 7.30 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை கடந்து பழைய வண்ணாரப்பேட்டை வழியாக செல்லும்போது மின் கம்பி அறந்து விழுந்தது. இதனால், மின்சார ரயில் நின்றது.

அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், பெரம்பூர் லோகோ, வில்லிவாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தண்டவாளத்தில் இறங்கி நடந்து அருகில் உள்ள பஸ் நிலையங்களுக்கு சென்று பேருந்து மற்றும் ஆட்டோக்களில் சென்றனர்.

மேலும், சென்னை சென்ட்ரல் பகுதியில் இருந்து திருவள்ளூர் -அரக்கோணம் செல்லும் ரயில்களும் மிகவும் காலதாமதமாக இயக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் எதிர் திசையில் இருந்து வந்த ரயில்கள் சென்ட்ரல் மற்றும் பீச் ஸ்டேஷன் செல்லாததால் ரயில்கள் இல்லாமல் திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் செல்லும் பாதையில் சுமார் ஒன்றரை மணி நேரம் ரயில்கள் இல்லாமல் பொதுமக்கள் காத்துக் கிடந்தனர்.

இரவு 8.55 மணியளவில் ரயில் சேவை சீரானதும் மீண்டும் பழையபடி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து அரக்கோணம் பகுதியில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயில்களும் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

The post மின்கம்பி அறுந்து மின்சார ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: