புழல், ஜூலை 19: செங்குன்றத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஊழியரை, போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஜி.என்.டி சாலையில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இவரது, கடையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் சென்னை கே.கே நகர், ஜீவானந்தம் சாலையை சேர்ந்த கணேஷ்குமார்(40) என்பவர், கடந்த 6 ஆண்டுகளாக விற்பனையாளராக வேலை செய்தார்.
இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் உரிமையாளரான ரவிச்சந்திரன், நேற்று முன்தினம் தற்செயலாக சிசிடிவி கேமராவை பார்த்தபோது, கணேஷ்குமார், பணத்தை எடுத்து பக்கெட்டில் போடும் வீடியோ காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்து கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அதில், ரூ.40 லட்சம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செங்குன்றம் உதவி கமிஷனர் ராஜாராம் உத்தரவின்பேரில், வழக்குப்பதிவு செய்த குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், சூப்பர் மார்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணேஷ்குமாரை நேற்று கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post செங்குன்றத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடி: ஊழியர் கைது appeared first on Dinakaran.
