வேலூர், ஜூலை 19: வேலூரில் இருதரப்பினர் அடுத்தடுத்து நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. அதே ஊர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், முகாமில் உள்ளவர்களுக்கும் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மறுவாழ்வு முகாமில் இருந்த இரண்டரை வயது ஆண் குழந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அந்த குழந்தையின் சடலத்தை பாலாற்றில் அடக்கம் செய்துவிட்டு முகாமை சேர்ந்த சிலர் ஊர் வழியாக வந்துள்ளனர். அப்போது வழியில் இருந்த மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் மாறி மாறி அங்கேயே தாக்கிக் கொண்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இருதரப்பினரும் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை திரட்டி கொண்டு வந்து மாறி மாறி முகாமிற்குள்ளும், ஊருக்குள்ளும் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் கார் உட்பட சில பொருட்கள் சேதமடைந்தாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதற்கிடையில் முகாமில் தங்கியுள்ள பொதுமக்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொள்ளும் வகையில் உருட்டு கட்டைகளுடன் இருதரப்பினரும் முன்னேறி வந்தனர். அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது. உடனடியாக ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் 3 டிஎஸ்பிகள் தலைமையில் 50க்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த வேலூர் ஆர்டிஓ செந்தில்குமார், தாசில்தார் வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அசம்பாவிதங்கள் தவிர்க்க 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு; இருதரப்பினர் அடுத்தடுத்து சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு: ஆர்டிஓ, ஏடிஎஸ்பி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.
