×

மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ.12.25 லட்சம் மானியம் வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

வேலூர், டிச.12: வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ.12.25 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜரினாபேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘பழங்களின் அரசன்’ என்று மாம்பழம் பெருமையாக அழைக்கப்படுகிறது. மா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு 7ம் இடமும், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் 7ம் இடமும் வகிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மா பயிரானது சராசரி 5,800 ஹெக்டேர் பரப்பில் 44,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணம்பட்டு, அணைக்கட்டு வட்டாரங்களில் மா அதிகமாக பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் தங்களது மா உற்பத்தியை ஆந்திர மாநில மாங்கூழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
சென்ற ஆண்டு மா விவசாயிகள் மகசூல் எடுத்தது விற்பனை செய்ய இயலாமல் நஷ்டமடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தோட்டக்கலை துறை மூலமாக மாம்பழக்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க அரசு ரூ.12.25 லட்சம் மானியம் வழங்க உள்ளது. எனவே வேலூர் மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை துணை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vellore ,Horticulture ,Vellore district ,Vellore Horticulture Department ,Deputy Director ,Zarina Begum ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...