வேலூர், டிச.13: வேலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 83 வயதான ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வேலூரில் ஒரு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இந்த பள்ளி அருகே, ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர் ரசாக்(83) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மாணவர்கள், இவரது கடையில் தின்பண்டங்கள் வாங்குவது வழக்கம். அதேபோல், 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியும் அந்த கடையில் தின்பண்டங்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன் காரணமாக அவரிடம் கடைக்காரர் நன்றாக பேசி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி கடையில் தின்பண்டம் வாங்க சென்ற சிறுமியிடம், ரசாக் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரசாக்கை நேற்று கைது செய்தனர்.
