ஒடுகத்தூர், ஜூலை 18: ஒடுகத்தூர் அருகே திடீரென சாமியாடிய நபர் மலை மீது ஏறி பாறைகளுக்கு நடுவே முருகர் கற்சிலையை கண்டெடுத்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. தற்போது இந்த கல்குவாரி இயங்குவது இல்லை. இங்குள்ள மலை மீது சுவாமி சிலை இருப்பதாக அப்பகுதியில் வசித்து வரும் சிலருக்கு 2, 3 மாதமாகவே சுவாமி கனவில் வந்து அருள் வாக்கும் கூறி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், கிராமம் முழுவதும் மலை மீது சுவாமி சிலை, புதையல் இருப்பதாக ஒரு பேச்சு உலா வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கும் மலை மீது சுவாமி சிலை இருப்பது போன்று கனவு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் திடீரென ராஜமாணிக்கத்திற்கு சுவாமி வந்தது. அப்போது, வேப்பிலையை வாயில் மென்றபடி சுவாமி ஆடிக் கொண்டே அருகே உள்ள மலை மீது ஏறியுள்ளார்.
இதனால், அப்பகுதி மக்களும் அவரது பின்னே சென்றுள்ளனர். அப்போது, மலை மீது உள்ள அடர்ந்த முட்புதர்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவே ஓர் இடத்தை குறிப்பிட்டு அங்கு தோண்டும்படி கூறியுள்ளார். இதனால், பொதுமக்களும் சுவாமி வந்தாடிய நபர் சொல்லும் இடத்தில் தோண்டியுள்ளனர். அப்போது, பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து தோண்டும் போது மார்பளவு மட்டுமே தோண்ட முடிந்துள்ளது. அதற்குமேல் அவர்களால் சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது, சுவாமியாடிய அந்த நபர் ‘நான் இங்கு பல ஆண்டுகளாக குடி கொண்டுள்ளேன், எனக்கு இங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும்’ என்று கூறி சாந்தியடைந்துள்ளார்.
இந்நிலையில், ஆடி முதல் நாளில் மலை மீது முருகர் சிலை கண்டெடுக்கப்பட்ட இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர். மேலும், இதற்கிடையே கிராம மக்கள் சிறிய ரக ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து சுவாமி சிலை அமைந்துள்ள இடத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த தாசில்தார் வேண்டா, இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு சுவாமி வந்து சிலையை எடுக்க வேண்டாம். அப்படி மீறி சிலையை இங்கிருந்து வேறு ஒரு எல்லைக்கு எடுத்து சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்றார்.
பின்னர், அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது சம்பந்தமாக நாளை (இன்று) முடிவு எடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஒடுகத்தூர் அருகே ஆடி முதல் நாளான நேற்று மலை மீது முருகர் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
The post பழமையான முருகர் சிலை பாறைகளுக்கு நடுவே கண்டெடுப்பு: ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.
