×

வனப்பகுதிக்குள் வழிதவறி தொழிலாளி 3 நாட்களாக சிக்கி தவிப்பு

ஒடுகத்தூர், ஜூலை 18: ஒடுகத்தூர் வனப்பகுதிக்குள் ஆடுகளை மேய்க்க சென்ற தொழிலாளி வழிதவறி 3 நாட்களாக சிக்கி தவித்துள்ளார். அவரை கிராம மக்கள் மீட்டனர்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு(53). இவர் விவசாயம் செய்து கொண்டு சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் என்பவர் அந்த கிராமத்தில் சுற்றி திரிந்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, கிருஷ்ணன் வேலை வேண்டுமென கேட்டதால் பாபு தங்களின் விவசாய நிலத்தில் பயிர் செய்து ஆடு, மாடுகளை மேய்த்து கொள்வதற்காக அவரை வேலைக்கு சேர்த்து கொண்டார். மேலும், நாள்தோறும் கிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்க்க அருகே உள்ள பரவமலை காப்புக்காடு வனப்பகுதிக்குள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல், கடந்த 15ம் தேதி ஆடுகளுடன் அருகே உள்ள காப்புக்காட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு நீண்ட நேரமாகியும் கிருஷ்ணன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பாபு குடும்பத்தினர் வனப்பகுதிக்குள் சென்று தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2 நாட்களாக கிராம மக்கள் உதவியுடன் கிருஷ்ணனை தேடிப்பார்த்துள்ளனர். கடந்த 3 நாட்களாக மாயமானவரை தேடியும் அவர் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில், நேற்று மீண்டும் காணாமல் போன கிருஷ்ணனை தேடி பாபு மற்றும் ஊர் மக்கள் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது, வழிதவறி சென்று ஆடுகளுடன் காட்டுக்கு நடுவே ஒரு மரத்தடியில் கிருஷ்ணன் இருந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது கடந்த 3 நாட்களாக வனப்பகுதிக்குள் கொட்டும் மழையில் நனைந்தபடி ஆடுகளை பத்திரமாக பார்த்துக் கொண்டு வழி தெரியாமல் இருந்துள்ளதாக கிருஷ்ணன் கூறினார்.

பின்னர், அவரை மீட்ட கிராம மக்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும், இதுதொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வனப்பகுதிக்குள் வழிதவறி தொழிலாளி 3 நாட்களாக சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Babu ,Kollamedu ,Periya Eeriyur ,Odugathur, Vellore district ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...