சேந்தமங்கலம், ஜூலை 18: கொல்லிமலை சோளக்காடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில் உள்ளிட்ட ஏராளமான வரலாற்று புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் அம்மாவாசை பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். குறிப்பாக அமாவாசை அன்று கரூர், சேலம், திண்டுக்கல், ஈரோடு, ஆத்தூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கோயில்களுக்கு வந்து செல்வார்கள்.
கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியிருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றவுடன் முதல் பகுதியாக வருவது சோளக்காடு. இங்கு பிரசித்தி பெற்ற பழச்சந்தை உள்ளது. கொல்லிமலையின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு, ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள், மாலையில் சோளக்காடு பகுதியில் உள்ள பழச்சந்தையில் பலாப்பழம், அன்னாசி, வாழை உள்ளிட்ட பழங்களை வாங்குவதற்காக தாங்கள் வந்த வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, கும்பலாக சென்று விடுவார்கள். இதனால் சோளக்காடு பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆலோசனை நடத்தி, போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சோளக்காடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். நேற்று இளநிலை உதவி பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில், நெடுஞ்சாலை பணியாளர்கள் சோளக்காடு பகுதிகளில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனையொட்டி, எஸ்ஐ குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
The post சோளக்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.
