பயிர் சாகுபடிக்கு 8 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு வைப்பு

நாமக்கல், ஜூலை 18: நாமக்கல் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான 8 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. போலி உரங்களை விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காவிரி பாசனம், வாய்க்கால் பாசனம், ஏரி பாசனம் மூலம் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தற்போது நெற்பயிர், சோளம், மக்காச்சோளம், பாசிபயறு, நிலக்கடலை, கரும்பு, பருத்தி, தென்னை, மா, வாழை, மரவள்ளி கிழங்கு மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தேவையான உரங்களை, விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, பயிர்களுக்கு தேவையான உரம் மாவட்டத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர், சோளம், மக்காச்சோளம், பாசிபயறு, நிலக்கடலை, கரும்பு, பருத்தி, தென்னை, மா, வாழை, மரவள்ளி கிழங்கு மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 1740 மெட்ரிக் டன், டிஏபி 1129 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1247 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3590 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 344 டன் என மொத்தம் 8040 டன் உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உரம் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு கிடைக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். உரிமத்தில் அனுமதி பெறாமல், கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்குமேல் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையை விவசாயிகளின் பார்வையில் படும் வகையில் தினமும் பராமரிக்க வேண்டும்.

உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல் கூடாது. விவசாயிகளுக்கு தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக்கூடாது. உரம் தொடர்பான புகார்களுக்கு, 98425 43215 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்கள் விநியோகம் செய்யப்படுகிறதா? என்று உர ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உர உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் மண் ஆய்வுகள் அடிப்படையிலும், தேவையான சமச்சீரான உரம் பயன்படுத்தி மண் வளம் காத்து அதிக லாபம் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post பயிர் சாகுபடிக்கு 8 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: