வீடு வாங்கி தருவதாக ரூ.6லட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு குடியாத்தம் அருகே கிராமத்தில்

வேலூர்: குடியாத்தம் அருகே கிராமத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்துள்ளதாக எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்தார்.

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று புதிய எஸ்பியாக பொறுப்பேற்ற மயில்வாகனன் தலைமையில் நடந்தது. அப்போது கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அளித்த மனு: நான் 60 சதவீதம் மாற்றுத்திறனாளியாக உள்ளேன். என்னிடம் காட்பாடியை சேர்ந்த ஒருவர், கொத்தமங்கலத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறினார். இதற்காக ரூ.24,000 முன்பணம் கொடுத்தேன். ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அந்த நிலத்தை எனக்கு கிரையம் செய்யாமல், வேறொருவருக்கு விற்றுள்ளார். முன்பணமாக செலுத்திய ரூ.24,000 பெற்று தரவேண்டும்.

புதுவசூர் பேங்க் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்கள் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டும் எனக்கூறி எங்களிடம் ரூ. 4 ஆயிரத்தை ஒருவர் வசூலித்தார். ஆனால் இதுவரை சிசிடிவி கேமராக்களை சரிசெய்யவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த பெண் அளித்த மனு: எனது அக்காவின் மருமகன் வீடு வாங்கி தருவதாக என்னிடம் கூறினார். இதை நம்பி ரூ.6 லட்சத்தை, அவரிடம் கொடுத்தேன். ஆனால் வீட்டை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் என்னையும், எனது மகனையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்று தர வேண்டும்.

வேலூர் தோட்டப்பாளயைத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி அளித்த மனு: நான் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற எனது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு, எனது மருமகள் என்னை அடித்து துன்புறுத்துகிறார். மேலும் வீட்டைவிட்டு வெளியேற்ற முயற்சி செய்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பலர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி மயில்வாகனன், உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

The post வீடு வாங்கி தருவதாக ரூ.6லட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு குடியாத்தம் அருகே கிராமத்தில் appeared first on Dinakaran.

Related Stories: