×

பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்திலிருந்து நாள்தோறும் 2827 நகர பேருந்து இயக்கப்படும்

திருச்சி, ஜூலை 17: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்தில் இருந்து நாள்தோறும் 2827 நகர பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மத்திய பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கட்ட, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்தின் இயக்கத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பஸ்சில் ஏறி பயணிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த புதிய ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் இருந்து தினசரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மாநகரின் முக்கிய நகர்ப்புற வழித்தடங்களான பாலக்கரை, தில்லை நகர், உறையூர், மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், வயலூர், ரங்கம், சமயபுரம், திருவெறும்பூர், துவாக்குடி ஆகிய வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப பகல் மற்றும் இரவு நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழித்தடங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 10 வரை தற்சமயம் இயக்கப்படும் நடைகளை விட கூடுதலாக 196 நடைகள் அதிகரித்து இயக்கப்படவுள்ளது.

மேலும் புதிய ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் இருந்து தினசரி அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பஸ்கள் உட்பட முக்கிய நகரங்களான தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், சென்னை, பெங்களூர், நாமக்கல், சேலம், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், பழனி, குமுளி, மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய மார்க்கங்களில் புறநகர பஸ்கள் இயக்கப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் முனையத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பரிசோதகர்கள் மற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சீரான பஸ் இயக்கம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

பஸ்கள் இயக்கப்படும் விபரம்:
தற்சமயம் இயக்கப்படும் நடைகளை விட கூடுதலாக 50% அதிகரித்து முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம், பாலக்கரை, சத்திரம் பஸ் நிலையம் வழியாக ரங்கம் செல்லும் வகையில் 69 நடைகளும், தில்லை நகா், உறையூர் வழியாக சமயபுரம் செல்லும் வகையில் 62 நடைகளும், காட்டூர், திருவெறும்பூர் வழியாக துவாக்குடி வரை செல்ல 25 நடைகளும், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக போலிஸ் காலனி செல்ல 20 நடைகளும், சோமரசம் பேட்டை வழியாக வயலூர் செல்லும் வகையில் 12 நடைகளும் மற்றும் மணிகண்டம் வழியாக நாகமங்கலம் செல்லும் வகையில் 8 நடைகளும் என மொத்தம் 196 நடைகள் இயக்கப்படும்.

புறநகர பஸ்கள் இயக்கம்:
சென்னை மார்க்கத்தில் 317 நடைகளும், விழுப்புரம் மார்க்கத்தில் 127 நடைகளும், பெங்களூர் மார்க்கத்தில் 22 நடைகளும், நாமக்கல், சேலம் மார்க்கத்தில் 258 நடைகளும், கரூர் மார்க்கத்தில் 404 நடைகளும், திண்டுக்கல் மார்க்கத்தில் 351 நடைகளும், மதுரை மார்க்கத்தில் 398 நடைகளும், தஞ்சாவூர் மார்க்கத்தில் 504 நடைகளும், பட்டுக்கோட்டை மார்க்கத்தில் 11 நடைகளும், புதுக்கோட்டை மார்க்கத்தில் 334 நடைகளும், பொன்னமராவதி மார்க்கத்தில் 57 நடைகளும், தோகைமலை மார்க்கத்தில் 34 நடைகளும் (அனைத்து வழித்தடத்திலும் அரசு பஸ்களுடன், தனியார் பஸ்களும் சேர்த்து கூறப்பட்டுள்ளது) என மொத்தம் 2 ஆயிரத்து 817 நடைகள் நாள்தோறும் புறநகர பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

இயக்கப்படும் வழித்தடங்கள்:
சென்னை, திருப்பதி, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சோி மார்க்கமாக திருச்சி வரும் அனைத்து பஸ்களும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்திற்கு செல்லும். மீண்டும் பஞ்சப்பூர் பஸ் முனையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்ப செல்ல வேண்டும்.

டெல்டா பகுதி மார்க்கம்:
திருச்சிக்கு வரும் இந்த பஸ்களும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பஸ் முனையத்திற்கு செல்லும். அங்கிருந்து மீண்டும் தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்ப செல்ல வேண்டும்.

நாமக்கல், சேலம், பெங்களூர் மார்க்கம்:
இந்த வழித்தடங்களில் திருச்சி நோக்கி வரும் அனைத்து பஸ்களும நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் செல்லும். பஞ்சப்பூரில் இருந்து மீண்டும் தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்ப செல்லும்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம் மார்க்கம்:
இந்த வழித்தடத்தில் வரும் பஸ்கள் அனைத்தும் திருச்சிக்கு விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் வந்து சேரும். பஞ்சப்பூரில் பஸ் முனையத்தில் இருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லும். எனவே பயணிகள் இப்புதிய பஸ் முனையத்தை தங்கள் தேவைக்கு ஏற்பட சிறப்பாக பயண்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்திலிருந்து நாள்தோறும் 2827 நகர பேருந்து இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Panchapur New Bus Terminal ,Trichy ,Panchapur ,New Bus Terminal ,Central ,Bus ,Station ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்