நாமக்கல், ஜூலை 17: நாமக்கல் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 9114 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். கல்லாதவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு 2022-23 முதல் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளித்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டில் சுமார் 60ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும், 12ஆயிரத்து 889 கற்போர்களுக்கு, கடந்த நவம்பர் மாதம் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்க பாடதிட்டம் உருவாக்கப்பட்டு, அந்தந்த வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிவில், கற்போருக்கான மதிப்பீட்டு தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 12ஆயிரம் பேர் எழுதினர். இதனை தொடர்ந்து, தற்போது 2ம் கட்டமாக, மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களில், 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டார வளமையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கற்போர் மையம் அமைக்கப்பட்டு, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். இம்மையத்தில் 20 கற்போர்களுக்கு தன்னார்வலர் ஆனந்தி மூலம் பயிற்சி வழங்கப்பட உளள்து. எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியுடன் தொழிற்கல்வியும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாமக்கல்லை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது 2ம் கட்டமாக புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி 7 மாத காலம் நடைபெறும். எழுத, படிக்க தெரியாதவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
அனைத்து குடியிருப்புகளிலும் கல்லாதோர் கணக்கெடுப்பு பணி தன்னார்வலர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, கண்டறியப்பட்டு வருகிறார்கள். அனைவரையும் கற்போர் மையங்களில் சேர்த்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.
The post மாவட்டத்தில் 9114 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி தொடக்கம் appeared first on Dinakaran.
