ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்; அங்கன்வாடி மையம் திறப்பு

 

பள்ளிப்பட்டு, ஜூலை 17: பள்ளிப்பட்டு அருகே நொச்சிலியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது. பலவீனமடைந்த கட்டிடத்தில், செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இடிந்து விழும் அபாய நிலை கட்டிடம் இருப்பதாகவும் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து மகளிர் சுய உதவிக்குழுவிடமிருந்த நியாய விலைக்கடையை திருத்தணி தாலுகா மார்க்கெடிங் சொசைட்டிக்கு மாற்றப்பட்டு தற்காலிகமாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்தார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்று பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றியச் செயலாளர் ரவீந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், ஒன்றிய பொறியாளர் ரிஷிகேஷ், திமுக நிர்வாகிகள் சஞ்சீவி ராஜ், மோகன், மீசை வெங்கடேசன், சுனில் குமார், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராகவன்நாயுடுகுப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரைகள் உடைந்தும், கட்டிடங்கள் சேதமடைந்தும் காணப்பட்டது. இதனை அகற்றிவிட்டு, புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் என்று திருத்தணி எம்எல்ஏ சந்திரனிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளதாக கடந்த 6ம் தேதி தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் பங்கேற்று, புதிய அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார்.

The post ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்; அங்கன்வாடி மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: