புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களை பாராட்டி காசோலையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!

சென்னை: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை பாராட்டி அமைச்சர் தா.மோ.அன்பரசன் காசோலையை வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் இன்று அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கி 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது –

“ தமிழ்நாடு அரசின் EDII நிறுவனம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் முனைவு பயிற்சியுடன் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிதி உதவிகளை அளித்து வருகிறது. இன்று இந்த விழாவில், புத்தாக்கபற்று சீட்டுதிட்டத்தின்கீழ் 15 புதியண்டுபிடிப்பாளர்களுக்கும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 மாணவ குழுக்களுக்கும் என மொத்தம் 65 புதிய கண்டுபிடிப்புக்களுக்கு ரூ.40 இலட்சத்து 50 ஆயிரம் உதவி தொகையும், பரிசுத் தொகையும், வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பரிசுகளை பெறும் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்டபுதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு என் பாராட்டுகளையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்த கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுப்பிடிப்புக்களான ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய கருவி, கப்பல் ஊழியர்களுக்கான பாதுகாப்பு பெல்ட், Sound Gun, அன்னாச்சி பழம் அறுவடை கருவி, மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என பல்வேறு கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

உலக நாடுகளுடன் நாம் போட்டி போடுவதற்கு புதிய கண்டுப்பிடிப்புகள் அவசியம் அத்தகைய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட தமிழ்நாட்டில் உள்ள புத்தாக்க சிந்தனை கொண்ட இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 2001- ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – EDII தனது 25 ஆண்டு கால சேவையினை நிறைவு செய்து வெள்ளி விழாவை கொண்டாட உள்ளது. நிறுவனத்தின் இயக்குநர், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி, மருத்துவம், தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் அவர்கள் தொழில்துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் விளைவாக தமிழ்நாடு இன்று இந்திய அளவில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் முதல் மாநிலமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. புத்தாக்கத் தொழில்கள் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. புத்தாக்க சிந்தனைக் கொண்ட நம் இளைஞர்கள் – மாணவர்களுக்கு EDII நிறுவனம் மூலம் மாவட்ட தலைநகரங்கள், கல்லூரிகள், பள்ளிகள், வட்டார அளவிலும் தொழில் முனைவு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கழக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டு காலத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்து 735 நபர்களுக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 19 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்லாமல் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்குவதிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் “பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தினை” அறிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 74 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் விழிப்புணர்வு பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 21 லட்சத்து 86 ஆயிரம் பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. புத்தாக்க தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 40 ஆயிரத்து 820 கல்லூரி மாணவர்களுக்கும், அரசு கல்லூரிகளில் உள்ள Incubation Centres மூலம் 1 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களுக்கும் என இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க இளைஞர்களுக்கு கழக அரசு உதவி தொகையினை புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்காக வழங்கப்பட்டுவரும் உதவித் தொகை நடப்பாண்டு முதல் ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், அவற்றை தயாரித்து-சந்தைப்படுத்த வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 470 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ. 12 கோடியே 10 லட்சம் உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவ குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற 130 சிறந்த மாணவ குழுக்களுக்கு ரூ.63 லட்சத்து 25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களை இளம் தொழில் முனைவோர்களாக வளர்த்தெடுக்க 124 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழில் வளர் காப்பகங்கள்-Incubation Centres அமைக்கப்பட்டு உள்ளது.தொழில் வளர் காப்பகங்களை மேம்படுத்தவும், நவீன இயந்திரங்களை அமைக்கவும், கடந்த 4 ஆண்டுகளில் 39 Incubation Centres- தொழில் வளர் காப்பகங்களுக்கு, ரூ. 21 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசின் தொழில் வளர் காப்பகங்களை பயன்படுத்தி கடந்த 4 ஆண்டுகளில் 961 இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து தொழில்முனைவோர்களாக உருவாகி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள உயர் கல்விநிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மாணவர்களை தொழில் முனைவோர்களை உருவாக்கிட “நிமிர்ந்து நில்” என்ற திட்டம் ரூ.19 கோடியே 57 லட்சம் செலவில் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டின் 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் உள்ள 9000 நபர்களுக்கு ரூ. 2 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் தொழில் முனைவோர் பயிற்சியும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது மின்வணிகம், அடுமனைப்பொருட்கள் தயாரிப்பு, தங்க மதிப்பீட்டாளர், செயற்கை நுண்ணறிவு உட்பட 16 க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் Start-Up நிறுவனங்களைஉருவாக்க, புத்தொழில் முனைவோர்களுக்கு ஆதார நிதி வழங்கும் (TANSEED) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை169 நிறுவனங்களில் ரூ.18 கோடியே 79 லட்சம் முதலீடும், 36 SC / ST Start-Up நிறுவனங்களில் ரூ.51 கோடியே 20 லட்சம் முதலீடும், ஆக மொத்தம், கடந்த 4 ஆண்டுகளில் 205 Start-Up நிறுவனங்களில்,ரூ. 69 கோடியே 99 லட்சம் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக நடப்பு நிதி நிலை அறிக்கையில், ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் அவர்களின் சீரிய திட்டங்களால் ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டு காலத்தில் ரூ. 2 ஆயிரத்து 20 கோடியே 96 லட்சம் மானியத்துடன், ரூ.5 ஆயிரத்து 180 கோடியே 18 லட்சம் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு, 59 ஆயிரத்து 584 நபர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 2G, 3G, 5G என உலகம் வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் காலத்தில் நம் மாணவர்களும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து மக்களின் தேவையினை புரிந்து தரமான பொருட்களை – குறைந்த விலையில் உருவாக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டு, உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் பயிற்சிகள் நிதி உதவிகள் வழங்க அரசு தயாராக உள்ளது. உங்கள் புதிய கண்டுபிடிப்புகளால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உருதுணையாக இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நிகழ்ச்சிக்கு முன் மாணவ மாணவியர்களின் புதிக கண்டுப்பிடிப்புக்களின் கண்காட்சியினை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் MSME அரசு துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், IAS, EDII இயக்குநர், இரா.அம்பலவாணன், IAAS, சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் COO மாயாவாசுதேவன், EDII துணை இயக்குநர் கமலக்கண்ணன் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர்கள், மாணவ மாணவியர்கள் ஆசிரிய பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.

The post புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களை பாராட்டி காசோலையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!! appeared first on Dinakaran.

Related Stories: