கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடக்கம்

சென்னை: டிட்வா புயல், கனமழை காரணமாக சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.89லட்சம் வீதம் மொத்தம் 15 மண்டலத்திற்கு ரூ.13.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை காலம் வந்துவிட்டால் போதும், சென்னை மக்கள் தினமும் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குவது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. சென்னையில் எங்கு பார்த்தாலும் பகல் நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. அதிலும், குறிப்பாக பீக் அவர்ஸ் நேரங்களில் சொல்லவே தேவையில்லை. இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் பிசியாக காணப்படும் சென்னை சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் சென்னை அருகே மையம் கொண்டிருந்த டிட்வா புயலால் ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது.

இந்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சுமார் 109 கிலோ மீட்டர் சாலைகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியுமான சாலைகளில் பலர் விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. பெருங்களத்தூர் அருகே சாலை மோசமாக பழுதடைந்திருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலர் அவதியடைந்தனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் உருவான குழிகளில் நிரம்பி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்ற நிலை உள்ளது. இதுமட்டுமல்ல, சாலையை துண்டித்து கேபிள் மற்றும் சாக்கடை கால்வாய் அடைப்பு போன்றவற்றை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளால் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக பைக்குகளில் செல்லக்கூடியவர்கள் பள்ளங்களில் சிக்கி வாகனத்தோடு விழுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை 387 கிலோ மீட்டர் தூரத்திற்கு 471 போக்குவரத்து சாலைகளும் 5500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3174 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் முக்கிய ரோடுகளில் பள்ளங்கள் அதிகளவு இருக்கின்றன. அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடனுக்குடன் சாலைகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக டிட்வா புயல் மழைக்கு பிறகு சாலை மிக மோசமானதாக காணப்படுகிறது. அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனே செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள். இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும் சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ஒரு மண்டலத்துக்கு தலா ரூ.89 லட்சம் வீதம் மொத்தம் 15 மண்டலங்களுக்கு ரூ.13.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்ைன மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக சாலை பணிகள் மறுசீரமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் கண்டறிந்து சீரமைக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் முக்கிய சாலைகள் எல்லாம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரமைக்கப்பட்டது. தற்போது மழை தொடங்கி விட்டதால் புதிதாக போடப்படும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் எல்லாம் மழை காலம் முடிந்த உடன் தொடங்கப்படும். இதற்கிடையே டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையால் சென்னையில் சாலைகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளது.

மழைக்காலங்களில் சாலைகள் சேதமடைவது இயல்பு தான். ஆனால், அந்த சேதங்களை உடனடியாக சரிசெய்வது மாநகராட்சியின் கடமையாகும். அதன் அடிப்படையில் சேதமடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கு ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன இயந்திரங்களை பயன்படுத்த சாலை சீரமைப்பு பணிகள் விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: