×

ஒரே இடத்தில் அனைத்து துறைகளின் சேவை பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்களுக்கு வாய்ப்பாக அமையும்

அரியலூர், ஜூலை 16: ஒரே இடத்தில் அனைத்து துறைகளின் சேவை பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்களுக்கு வாய்ப்பாக அமையும். ஒட்டு மொத்த அரசாங்கமும் வீடு தேடி வருகிறது என்று அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் ஆதனக்குறிச்சி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, வருவாய் அலுவலர் மல்லிகா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் 15 துறைகள் பங்கு பெற்ற முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று சிரமப்படுவதை நீக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசினுடைய 15 துறைகள் சார்பில் 45 சேவைகளை வழங்குவதற்கு, மக்கள் எதையெல்லாம் கோரிக்கையாக கொண்டு வருகிறார்களோ, அந்த கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதற்கு ஒப்புகைச் சீட்டு வழங்கி, அந்த மனு மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். யாரும் விடுபட்டு விடாமல் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசினுடைய திட்டங்கள் சென்று சேர இந்தத் திட்டம் ஒரு சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது. இதனை சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் 95 இடங்களில் இந்த முகாம்கள் நடக்க இருக்கின்றன. இதில் நகர பகுதிகளில் 20 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 75 முகாம்களும் நடைபெறுகின்றன. அதன் மூலமாக பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாமானது ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 15 இல் இருந்து செப்டம்பர் 14 வரை நடைபெற உள்ளது. அதற்கு அடுத்து 3ம் கட்டமாக செப்டம்பர் 15 ம் தேதி தொடங்கி அக்டோபர் 14 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்படி மூன்று கட்டமாக மாவட்டத்தில் எல்லா பகுதிகளும் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் மிக விரிவாக நடத்தப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும் மிகக்குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கு பெற்று தரக்கூடிய முகாமாக இது அமையும். அதற்காக தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமைத்தொகைக்கான மனுக்கள் பெறப்படும்.

எனவே மகளிர் உரிமைத்தொகை எவருக்கும் வராமல் விடுபட்டிருந்தால் அந்தந்த பகுதியிலேயே நடைபெறக்கூடிய முகாம்களுக்கு சென்றால் அங்குள்ள தன்னார்வலர்கள் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு எளிதான ஏற்பாடாக இருக்கும் 15 துறைகளில் தனித்தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே சென்று அந்தந்த துறை வாரியான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

பொதுமக்கள் ஒரே இடத்தில் அனைத்து துறைகளில் சேவைகளை பெறுவதற்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வாய்ப்பாக அமையும். இந்தியாவிலேயே எந்த மாநிலமும் சிந்தித்துப் பார்க்காத ஒரு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்துள்ளார்கள். ஒட்டு மொத்த அரசாங்கமும் ஒரே இடத்தில் களத்தில் இறங்கி மக்களை தேடி சேவைகளை வழங்குவதற்கும், வீடு தேடிச் சென்று சேவை வழங்கவும் இந்த திட்டம் சிறப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

The post ஒரே இடத்தில் அனைத்து துறைகளின் சேவை பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்களுக்கு வாய்ப்பாக அமையும் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Project Camp ,ARIYALUR ,STALIN PROJECT ,CAMP ,Minister ,Sivasankar ,Ariyalur District Sentura ,Stalin Project Camp ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...