×

“புதுமைப்பெண்’’ – “தமிழ்புதல்வன்’’ திட்டம்: கோவையில் 1.27 லட்சம் மாணவர்கள் பயன்

கோவை, டிச. 13: கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் 1.27 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 மாணவிகளின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக செலுத்தப்படும் “புதுமைப்பெண்’’ திட்டம் தமிழ்நாடு முதல்வரால் கடந்த 05.09.2022 அன்று துவங்கப்பட்டது.

இதேபோல், அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் “தமிழ் புதல்வன்’’ திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் கடந்த 09.08.2024 அன்று துவக்கிவைத்தார். கோவை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 70,648 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் 56,430 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு மாதம்தோறும், அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், கோவை மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பெரும் உதவிகரமாக இருப்பதால் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு நிகழ்ச்சி வாயிலாக மனம் நிறைந்து நன்றி தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : Putalvan ,Goa COVE ,District Collector ,Bhavankumar ,Goa ,Tamil Nadu ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...