உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்கம்

நாமக்கல், ஜூலை 16: நாமக்கல் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கியது. இதில், ராஜேஸ்குமார் எம்பி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாநகராட்சி சின்னமுதலைப்பட்டியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், ராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்பி முகாமை தொடங்கி வைத்து, மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற மாபெரும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், உங்களின் வீட்டிற்கே வந்து, கேட்டறிந்து தீர்வு காணும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாம், நாமக்கல் மாவட்டத்தில் வரும் 30.09.2025 வரை பல்வேறு கட்டங்களாக 40 நாட்கள் நடைபெறுகிறது.

எந்தெந்த நாட்களில், எந்தெந்த இடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் என்னென்ன சேவைகளை பெறலாம், எந்தெந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விபரங்களை, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

முகாம்களில் நகர்ப்புறபகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாநகராட்சி சின்னமுதலைப்பட்டியில், முகாம் தொடங்கிய 1 மணி நேரத்தில் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

சின்னமுதலைப்பட்டி சமுதாயக் கூடத்திலும், ராசிபுரம் நகராட்சியில் அரிமா சங்கத்திலும், அத்தனூர் பேரூராட்சியில் அத்தனூர் கிழக்கு பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்திலும், புதுச்சத்திரம் வட்டாரத்தில் பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் வட்டாரத்தில் பொட்டணம் மாரியம்மன் கோயில் கலையரங்கத்திலும், திருச்செங்கோடு வட்டாரத்தில் மோர்பாளையம் சக்தி மஹால் திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வழங்கும் மனுக்களை எளிதாக பதிவு செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், முறையாக பூர்த்தி செய்து பெறப்படுகிறது.

இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆய்விற்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, முகாமில் மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு, உடனடி தீர்வாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகியவற்றினை ராஜேஷ்குமார் எம்பி வழங்கினார்.

இம்முகாமில், மாநகராட்சி துணை மேயர் பூபதி, ஆணையாளர் சிவக்குமார், டிஆர்ஓ சுமன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வராசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், உதவி ஆணையர் (தொழிலாளர் நல வாரியம்) இந்தியா, திமுக நகர செயலாளர் சிவக்குமார், ராணா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் ஒன்றியம், பொட்டணம் மேற்கு மாரியம்மன் கோயில் திடலில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். மாதேஸ்வரன் எம்பி, எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், அட்மா குழு தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். விழாவில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிப்காட் டிஆர்ஓ சரவணன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன் மற்றும் ரவிச்சந்திரன், சசிகுமார், திமுக, கொமதேக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: