ஸ்பிக்நகர் : புதிய தொழில் நிறுவனங்கள் துவங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முத்தையாபுரத்தில் நடந்த திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழாவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நாடு போற்றும் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு முத்தையாபுரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் செந்தூர்பாண்டி தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் ‘‘தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது. அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
ஆண், பெண் சரிசமம் என்ற நிலையில் உள்ளோம். இதற்கு காரணமான கலைஞர்தான், தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிகளுக்கு வித்திட்டவர். முதன்முதலில் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்புகள் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழகத்தில்தான் செயல்படுத்தினோம்.
அதன்பிறகே ஒன்றிய அரசிடம் இருந்து தொகுப்பு வீடுகள் வந்தன. மனிதனை மனிதனே இழுப்பதை ஒழிக்க சைக்கிள் ரிக்சாவை அறிமுகப்படுத்திய முதல்வர் கலைஞர், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கா பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்.
அவரது வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தின்படி பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எல்லா மாநிலத்துக்கும் இதுபோல் தான் நிதி ஒதுக்குகிறது அதிலும் பல்வேறு திட்டங்களில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. ஆனாலும் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில், தொழில் வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ளோம். தனிநபர்களின் வருமானம் உயர்ந்துள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்தியாவில் 11 சதவீதம் உள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் துவங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது’’ என்றார்.
நிகழ்வில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் வாசுவிக்ரம், சரத்பாலா, இளம் பேச்சாளர் சஞ்சய், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மதியழகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் மீனவரணி புளோரன்ஸ், பொறியாளர் அணி அன்பழகன், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர்கள் ராஜதுரை, பட்சிராஜா, விஜயகுமார், முத்துவேல், சுயம்பு, ரூபன், ஜெயக்கனி, நடேசன் டேனியல், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பு பெருகும்
கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் ‘‘தமிழகத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக முதலில் கேரளாவை சொல்வார்கள் ஆனால் தற்போது தமிழகம் 81 சதவீதத்திற்கு சென்றுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் தான் குறிப்பாக முத்தையாபுரம் பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தவரும் வேலை வாய்ப்புகளை தேடி தூத்துக்குடியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் எந்த பகுதியில் எந்த தொழில் துவங்கினால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற நோக்கத்தோடு அந்த பகுதிகளில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெருக்கி வருகிறார்.
நமது பகுதியில் கடல், வான், தரை வழி போக்குவரத்துகள் உள்ளதால் கார் தொழிற்சாலை அமைய உள்ளது. இதன்மூலம் தமிழகம் உலகம் முழுவதும் சென்றடையும். வேலை வாய்ப்புகள் பன்மடங்கு பெருகும்’’ என்றார்.
The post முத்தையாபுரத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் புதிய தொழில் நிறுவனங்கள் துவங்குவதில் தமிழகம் முதலிடம் appeared first on Dinakaran.
