சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12ம் தேதி) மாலை திருவண்ணாமலைக்கு செல்கிறார். மாவட்ட எல்லையான திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் சோ.காட்டுக்குளம் பகுதியில் மாலை 5 மணி அளவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
நாளை (13ம் தேதி) திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் உள்ள மாதவிபன்னீர்செல்வம் திருமண மண்டபத்தில் நடைபெறும் அமைச்சர் எ.வ.வேலு இல்ல திருமணத்தை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.
திருவண்ணாமலை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தில் நடைபெறும் திருவண்ணாமலை வடக்கு மண்டல திமுக தேர்தல் பணி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் (பிஎல்ஏ 2) துணை முதல்வர் கலந்து கொண்டு, வரும் 2026 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து பேசுகிறார். இக்கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நாளை மாலை 5 மணி அளவில் திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மாநகர மேயருக்கு செங்கோல், தங்கச்சங்கிலி மற்றும் அங்கி அணிவிக்கும் விழாவில் துணை முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு திருமணக்கூடத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார்.
மாலை 6 மணி அளவில் செங்கத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, கலைஞரின் திருஉருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி விரிவான, பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலை பயணம் appeared first on Dinakaran.
