இந்திய மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க விசா கட்டணம் இரண்டரை மடங்கு உயர்வு: ரூ.16,000 இருந்து ரூ.40,000ஆக அதிகரிப்பு; அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

நியூயார்க்: இந்திய மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க விசா கட்டணம் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் சுற்றுலா, படிப்பு அல்லது வேலைக்காக அமெரிக்காவிற்குச் செல்ல முடிவு செய்தால் அடுத்த ஆண்டு முதல் அதிக விசா செலவுகளைச் சந்திக்க நேரிடும். இந்திய சுற்றுலாப் பயணிகள், மாணவர்களுக்கு புதிய அமெரிக்க விசா கட்டணம் ரூ.16,000 இருந்து ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க விசா ஒருமைப்பாடு கட்டணமாக ரூ. 21,400 திரும்பப் பெற முடியாத கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து போட்டு வெளியிட்ட அறிவிப்பு அடிப்படையில் பெரும்பாலான குடியேறாத விசா வகைகளுக்கு $250( ரூ.21,400) என்ற புதிய விசா நேர்மை கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனுடன் ரூ.16,000க்கும் குறைவான விலையில் இருந்த ஒரு வழக்கமான சுற்றுலா விசாவின் விலை இப்போது ரூ.40,000க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் பெரும்பாலான குடியேற்றமற்ற விசாக்களுக்குப் பொருந்தும். இதில் பி-1/பி-2 (சுற்றுலா மற்றும் வணிக விசாக்கள்), எப் மற்றும் எம் (மாணவர் விசாக்கள்), எச்-1பி (பணி விசாக்கள்) மற்றும் ஜே (பரிமாற்ற பார்வையாளர் விசாக்கள்) ஆகியவை அடங்கும். ஏ மற்றும் ஜி பிரிவுகளில் உள்ள அரசு ரீதியான விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* இப்போது எவ்வளவு?
தற்போது, ​​அமெரிக்க பி-1/பி-2 விசாவின் விலை 185 டாலர். இந்திய மதிப்பில் ரூ.15,800க்கு மேல் உள்ளது. இத்துடன் விசா நேர்மை கட்டணம்(250 டாலர்), I-94 கட்டணம் ($24) மற்றும் இஎஸ்டிஏ கட்டணம் ($13) போன்ற பிற சிறிய கட்டணங்களுடன் சேர்க்கப்பட்டால், மொத்த செலவு சுமார் $472 அல்லது ரூ.40,502 ஆக உயரும். இது தற்போதைய விசா செலவை விட 2.5 மடங்கு அதிகம். எப் அல்லது எச்-1பு போன்ற விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அல்லது ஊழியர்களுக்கும் விசா கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

* திரும்பப் பெற முடியுமா?
கட்டணத்தைத் தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ முடியாது என்றாலும், சில நிபந்தனைகளின் கீழ் அதைத் திரும்பப் பெறலாம். விசா வைத்திருப்பவர் அனைத்து விசா விதிமுறைகளுக்கும் இணங்கினால், அதாவது விசா காலாவதியான ஐந்து நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவது அல்லது சட்டப்பூர்வமாக தங்கியிருக்கும் காலத்தை நீட்டிப்பது அல்லது அந்தஸ்தை மாற்றுவது (உதாரணமாக – கிரீன் கார்டு பெறுதல்) போன்றவற்றுக்கு இணங்கினால், அவர்கள் பணத்தைத் திரும்பப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம். அதே சமயம் ஒருவர் விசா விதிகளை மீறி தங்கினால் அல்லது மீறினால், பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

* ஏன் திடீர் உயர்வு?
அமெரிக்க அரசாங்கம், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரிடையே சட்டபூர்வமான நடத்தையை ஊக்குவிப்பதற்காக ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பாதுகாப்பு வைப்புத்தொகையாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, பார்வையாளர்கள் தங்கள் விசாவின் விதிகளைப் பின்பற்ற ஊக்குவிக்கிறது.

* இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 1 சதவீத கலால் வரி
விசா நேர்மை கட்டணத்தைத் தவிர, டிரம்பின் 900 பக்க ‘ஒன் பிக் பியூட்டி புல் பில்’ சட்டத்தின் அடி்படையில் பணம் அனுப்புவதற்கு 1 சதவீத கலால் வரியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்புவதற்கு அதிக செலவை ஏற்படுத்தும். இது குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கி, அமெரிக்காவில் வசிக்கும் அல்லது பணிபுரியும் வெளிநாட்டினரிடமிருந்து வருவாயை அதிகரிப்பதற்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

The post இந்திய மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க விசா கட்டணம் இரண்டரை மடங்கு உயர்வு: ரூ.16,000 இருந்து ரூ.40,000ஆக அதிகரிப்பு; அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: