சத்தியமங்கலம், ஜூலை 10: பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் விண்ணப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக மதி என்ற நபர் வேலை செய்து வருகிறார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று காலை விண்ணப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டு பணித்தள பொறுப்பாளர் மதி என்பவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி செயலர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது நடைபெற்று வரும் பணி முடிவடைந்த பின் பணி தள பொறுப்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post பணித்தள பொறுப்பாளரை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட தொழிலாளர்கள் appeared first on Dinakaran.
