கிருஷ்ணராயபுரம், ஜூலை 9: கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனூரில் சாலையைக் கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் தேவாலய கூடலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவர் தனது தம்பியுடன் அவரது குலதெய்வமான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாரியம்மன் கோவிலுக்கு அரசு பஸ்ஸில் செல்லும் போது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனூரில் TNPL நிறுவனம் அருகில் உள்ள பேக்கரி கடையில் இரவு ஒரு மணி அளவில் பேருந்து டீ குடிப்பதற்காக நிறுத்தி உள்ளனர்.
அப்போது தங்கராஜ் இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். அவர் வருவதற்குள் பேருந்து கிளம்பியுள்ளது. அதனை கண்டு தங்கராஜ் திடீரென சாலையை மீண்டும் கடந்து வரும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது . இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது வாகனம் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.
