ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சுக்கு ஜூலை 16ல் தூக்கு

சானா: ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சுக்கு ஜூலை 16ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ேசர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா. 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்ற அவர் தனியாக கிளினிக் தொடங்க அந்த நாட்டு சட்டப்படி உள்ளூரை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து 2014ல் தனியாக கிளினிக் தொடங்கினார்கள். அதன்பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரில் மஹ்தி 2016ல் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தொடர்ந்து நர்ஸ் நிமிஷா பிரியாவை மிரட்டினார். பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டை மீட்க மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்த போது அவர் திடீரென இறந்தார். இதனால் பயந்து போன நிமிஷா நாட்டை விட்டு வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீது ஏமன் குடியரசின் சுதந்திரம், ஒற்றுமை அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுதல், ஆயுதப் படைகளை பலவீனப்படுத்தும் செயலைச் செய்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு கொலைக்குற்றவாளி என தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தது. அவரது தண்டனையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023 நவம்பர் மாதம் உறுதி செய்தது. இதையடுத்து நிமிஷாவை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக வரும் 16ஆம் தேதி நிமிஷாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை ஏமன் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சுக்கு ஜூலை 16ல் தூக்கு appeared first on Dinakaran.

Related Stories: