பக்கத்து வீட்டுக்காரர் எனக்கூறி வீடு புகுந்து மாடல் அழகியை சித்ரவதை செய்த கும்பல்: பிரான்ஸ் நாட்டில் பயங்கரம்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பக்கத்து வீட்டுக்காரர் எனக்கூறி வீடு புகுந்து பெண் சமூக ஊடகப் பிரபலத்தை சித்தரவதை செய்த கும்பல், அவரிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமான மாடல் அழகி சொரையா ரிஃபி (30) என்பவர், மார்சே நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த போது, பக்கத்து வீட்டுக்காரர் எனக்கூறி ஒருவர் கதவைத் தட்டியுள்ளார். சொரையா கதவைத் திறந்ததும், ஆயுதங்களுடன் காத்திருந்த மற்ற மூன்று நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து, அவரைக் கட்டிப்போட்டு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சித்திரவதை செய்துள்ளனர்.

பின்னர் துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்கி, அவர் முகத்தில் ‘ப்ளீச்’ திரவத்தை ஊற்றியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சுயநினைவை இழந்த சொரையா, பாலியல் பலாத்காரத்திற்கு தள்ளப்பட்டார். இந்த தாக்குதலுக்குப் பிறகு, அங்கிருந்த தடயங்களை அழிப்பதற்காக ‘ப்ளீச்’ திரவத்தை ஊற்றிவிட்டனர். பின்னர் சொரையாவின் ரோலக்ஸ் வாட்ச், விலை உயர்ந்த கைப்பைகள் மற்றும் முக்கிய பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்த சொரையா, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘என் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பே என்னிடம் மிரட்டி பணம் பறிக்கப் போவதாக மின்னஞ்சல்கள் வந்தன. அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்னை துன்புறுத்தி சிதைத்துவிட்டனர். இனிமேல் சமூக ஊடகங்களில் முகம் காட்ட முடியாது. எனவே சமூக ஊடகங்களில் இருந்து விலகப் போகிறேன்’ என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த திடீர் தாக்குதலுக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பக்கத்து வீட்டுக்காரர் எனக்கூறி வீடு புகுந்து மாடல் அழகியை சித்ரவதை செய்த கும்பல்: பிரான்ஸ் நாட்டில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: