பரஸ்பர வரிவிதிப்பு முறை ஆகஸ்ட் 1 வரை நீட்டிப்பு : 14 நாடுகளுக்கு இறக்குமதி வரி விதிப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!!

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கு விதிக்கக் கூடிய பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். அதன்படி, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கூடுதல் வரியை கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிவித்தார். இதில் இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரி, இரும்பு, அலுமினியத்திற்கு 50 சதவீத வரி, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 25 சதவீத வரி என பல கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்தினார். இது உலகளாவிய பொருளாதாரத்தை புரட்டிப் போடும் அபாயத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஒருவாரத்தில் கூடுதல் வரிகளுக்கு 90 நாள் தற்காலிக தடை விதிப்பதாக அறிவித்த டிரம்ப், அதற்குள் அமெரிக்காவுடன் அனைத்து நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள உத்தரவிட்டார். டிரம்ப் விதித்த 90 நாள் கெடு நாளையுடன் முடிகிறது.

இதுவரை சில நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ள நிலையில், பல நாடுகளும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வாஷிங்கடனில் இந்திய குழு முகாமிட்டு அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே பரஸ்பர வரிவிதிப்பு முறையை ஜூலை 9 வரை ஒத்திவைத்திருந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் 14 நாடுகளுக்கு இறக்குமதி வரி விதிப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். தாய்லாந்து நாட்டுக்கு 36% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு தலா 25% இறக்குமதி வரி, லாவோஸ் -40%, மியான்மர் -40%, தென் ஆப்பிரிக்கா -30%, மலேசியா -25%, துனிசியா 25% வரி, இந்தோனேசியா-32%, கம்போடியா 36%, செர்பியா -35%, வங்கதேசம் -35%, கஜகஸ்தான் -25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

The post பரஸ்பர வரிவிதிப்பு முறை ஆகஸ்ட் 1 வரை நீட்டிப்பு : 14 நாடுகளுக்கு இறக்குமதி வரி விதிப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!! appeared first on Dinakaran.

Related Stories: