பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு வெற்றிகரமாக நடந்தேறிய குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

திருச்செந்தூர்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு இந்த 4 ஆண்டுகளில் மூத்த குடிமக்களுக்கான ஆன்மிக பயணத்தில் 2000 பேர் அறுபடை வீடுகளை தரிசித்துள்ளார்கள். அறுபடை வீடுகளில் 860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்துள்ளது. தமிழ்க் கடவுளான முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். ஒரே வழக்கிற்கு 3 முறை உச்சநீதிமன்றத்தை அணுகிய விசித்திரம் நடந்துள்ளது. சக்தி கொண்ட முருகன் எல்லாவற்றையும் சூரசம்ஹாரம் செய்து மகிழ்ச்சியோடு இந்த குடமுழுக்கை ஏற்றுக் கொண்டுள்ளார். திருச்செந்தூரில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடந்துள்ளது. இவ்விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடமுழுக்கு விழாவில் 24 மணி நேரமும் 12 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 108 ஓதுவார்கள் தமிழில் பாராயணம் செய்தனர். குடமுழுக்கு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவருக்கும் துறை அமைச்சர் என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஹெச்சிஎல் நிறுவனம் ரூபாய் 200 கோடி செலவில் திருச்செந்தூர் கோயிலில் உபயமாக பணிகளை செய்திட கடந்த ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரர்களை ஊக்குவிக்கும் விதமாக அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசு சார்பிலும், கோயில் சார்பிலும் கூடுதலாக 200 கோடி என மொத்தம் ரூ.400 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும். கோயிலில் ஆன்லைன் முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்காக பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் 5 கோயில்களில் ஆன்லைன் தரிசன வசதி செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட திருக்கோயிலாக திருச்செந்தூர் கோயில் விரைவில் மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு வெற்றிகரமாக நடந்தேறிய குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: