புதுடெல்லி: முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சுயமாக விவரங்களை பதிவு செய்வதற்கு வலைபக்கம் உருவாக்கப்படும்.
நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனிடையே மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனை ஏற்று மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்த்து மேற்கொள்ளப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
ஜூன் 16 அன்று வெளியிடப்பட்ட அரசாணை அறிவிப்பின்படி, இது இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்கு பிறகு எடுக்கப்படும் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். மிக பெரிய அளவில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக தேசிய பயிற்சியாளர்கள், முதன்மை பயிற்சியாளர்கள், கள பயிற்சியாளர்கள் அடங்கிய 3 அடுக்கு பயிற்சி முறையை இந்திய பதிவாளர் ஜெனரல் செயல்படுத்தியுள்ளார்.
இந்த கள பயிற்சியாளர்கள் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். சாதிவாரியான கணக்கெடுப்பு இருகட்டங்களாக வரும் 2027 ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் 2026 அக்டோபர் 1-ம் தேதி கணக்கெடுப்பு தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல் போன் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வருக்கு நேரடியாக அனுப்பப்படும். மக்கள் தொகை விவரங்களை பெற முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யும் வகையில் வலைபக்கம் உருவாக்கப்படும்.
The post நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: பொதுமக்கள் சுயமாக விவரங்களை பதிவு செய்ய தனி வலை பக்கம் appeared first on Dinakaran.
