சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள டிருடம் இபிசி இண்டியா நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகையை அந்த நிறுவனம் தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டது. இதன் மூலம் தங்களுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை. வங்கி அதிகாரிகள் எவரும் சம்மந்தப்படவில்லை. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் பண பரிமாற்றம் நடந்துள்ளதால் ரவிச்சந்திரனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் 15 லட்சம் ரூபாய் வங்கிக்கும், ரூ.15 லட்சத்தை சமரச மையத்திற்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
The post அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
