பூந்தமல்லி, ஜூலை 6: எண்ணூரில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் டேங்கர் லாரி ஒன்று நேற்று குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை சென்னையை சேர்ந்த ஓட்டுநர் சூர்யா (30) என்பவர் ஓட்டி வந்தார். குன்றத்தூர் – பெரும்புதூர் பிரதான சாலை சிறுகளத்தூர் அருகே சென்றபோது, டேங்கர் லாரியின் பின்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்தது. டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல், டீசல் கசிய தொடங்கியது. இதனைக்கண்டு, அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் லாரியில் சிக்கிய ஓட்டுநர் சூர்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பூந்தமல்லி மற்றும் பெரும்புதூர் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ராட்சத கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
The post எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.
