×

சிறைகளில் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் கேரள சிறைத்துறை ஐஜி பேச்சு ஆப்காவில் 5 மாநில போலீசாருக்கு பயிற்சி

வேலூர், ஜூன் 25: சிறைகளில் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என வேலூர் ஆப்காவில் நேற்று தொடங்கிய 5 மாநில போலீசாருக்கான பயிற்சி விழாவில் கேரள சிறைத்துறை ஐஜி பேசினார். வேலூரில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில்(ஆப்கா) தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களை சேர்ந்த 27 சிறை அலுவலர்களுக்கான சிறை பாதுகாப்பு அவசியம் மற்றும் சிறைகளில் அவசர நிலை சமாளித்தல் குறித்து 3 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது.

பயிற்சிக்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக காணொலியில் கேரள மாநில சிறைத்துறை தலைமை இயக்குநர் பலராம் குமார் உபாத்யாயா கலந்து கொண்டு பேசியதாவது: சிறைத்துறை தற்போது ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மொபைல் ஜாமரை தகர்த்து செல்போனில் பேசுதல், உடலில் மறைத்து வைத்து போதைப் பொருளை சிறைக்குள் எடுத்து வருதல், போதைப் பொருள் பயன்பாடு, சிறையில் இருந்தவாறு வெளியில் உள்ள நபர்களை இயக்குவது உட்பட ஏராளமான சவால்கள் உள்ளன. கைதிகளை சோதனை செய்யும் போது மனித உரிமை மீறல் தொடர்பான சவால்களையும் எதிர் கொள்ள வேண்டி உள்ளது.

இதுதவிர கைதிகள் அதிகமாகுதல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் பலவிதமான பாதுகாப்பு சவால்களை சந்திக்க நேரிடுகிறது. சிறைகளில் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்வதற்கு இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது கற்றுக் கொள்ளும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை, சிறைக்கு சென்றதும் அதை நடமுறைப்படுத்தி கையாள முன்வர வேண்டும். தங்களது உயர் அதிகாரிகளுக்கு அதன் நன்மைகளை எடுத்துக்கூறி செயல்படுத்த வேண்டும்.

தொழில்நுட்பங்களை சுய பயன்பாட்டுக்கு மட்டும் கற்றுக் கொள்ளக்கூடாது. அரசு பயன்பாட்டுக்கும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஆப்காவில் மட்டும் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளாமல், கூகுளில் இருந்து தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவில் 185 பேர் சிறையில் மரணம்
நிகழ்ச்சியில் ஆப்கா இயக்குனர் பிரதீப் பயிற்சி புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், ‘இன்றைய காலக்கட்டத்தில் சிறைகளில் குற்றங்களை தடுப்பது என்பது சவாலாக உள்ளது. இந்தியா முழுவதும் சிறைகளில் 107 பேர் தப்பி உள்ளனர். மேலும் 185 பேர் சிறையினுள் மரணமடைந்துள்ளனர். இவைகளை தடுக்க பாதுகாப்பும் அதற்கான ஆற்றலும் அவசியம்’ என்றார்.

The post சிறைகளில் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் கேரள சிறைத்துறை ஐஜி பேச்சு ஆப்காவில் 5 மாநில போலீசாருக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kerala Prisons IG ,Afghanistan ,Vellore ,Institute of Prisons and Correctional Administration ,IPCA ,Vellore… ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...